| ADDED : ஆக 04, 2011 01:55 AM
வங்கி கடன் மீதான வட்டியை எட்டு சதவீதமும், வங்கியில் இருப்பில்
வைக்கும் தொகைக்கு ஏழு சதவீதம் என, மாற்றியுள்ளதை திரும்ப பெற கோரி, ஈரோடு
அனைத்து வணிகர் சங்கம் கூட்டமைப்பு தலைவர் சிவனேசன், மத்திய நிதியமைச்சர்
பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.கடிதத்தில் அவர்
கூறியுள்ளதாவது:இந்தியாவில் சிறு, குறு தொழில் வணிகம் பாதித்துள்ள நிலையில், தற்போது
பணவீக்கம் ஒன்பது சதவீதத்தை எட்டியுள்ளது. பாரத ரிஸர்வ் வங்கி சென்ற 15
மாதத்தில் 11 முறை 'ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதங்களை
மாற்றி உள்ளது. இதனால், வட்டி கட்ட முடியாத சூழ்நிலையை உருவாக்கி
உள்ளது.வங்கி கடன் மீதான வட்டியை எட்டு சதவீதமும், பாரத ரிஸர்வ் வங்கியில்
இருப்பு வைக்கும் தொகைக்கு ஏழு சதவீதமாகவும் மாற்றி உள்ளது. இதனால், வாகன
கடன் பெறுவோர், வீட்டு கடன் பெறுவோர், ஏற்றுமதியாளர்கள் என அனைத்து
தரப்பினரும் பாதிக்கப்படுவர்.இதனால், அரசு எதிர்பார்க்கும் ஒன்பது சதவீதம்
உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) இலக்கை, அடைய இயலாது. அதேபோல்,
பணவீக்கம் குறைய சந்தர்ப்பமே அமையாது. வங்கிகளில் சென்ற மூன்று மாதங்களில்
1.47 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. சென்றாண்டு இதே காலகட்டத்தில்
1.62 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளன.தொடர்ந்து கடன் பெறுவது குறைந்து
கொண்டே வருவது வங்கிகள் ஸ்திரமாக இயங்க முடியாத சூழ்நிலையை உருவாக்கி
விடும். தவிர, வங்கிகள் குறைந்தபட்ச லாபம் ஈட்டும் திறன் வெகுவாக குறைந்து
விடும். தவிர, 50 சதவீதம் மக்களே வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். இதை
உயர்ந்த எளிய கணக்குகள் திட்டம், பூஜ்ய இருப்பு கணக்கு என்ற திட்டங்கள்
முறையான பலனை தரவில்லை. வங்கியின் வேலைப்பாடுகள் தான் அதிகம் உள்ளன.
இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.