ஈரோடு : பெருந்துறை, சென்னிமலை உட்பட பல்வேறு கிராம பகுதிகளில் மின்சார பயன்பாடு கணக்கெடுக்கப்படாததால், மின் நுகர்வோர் சிரமப்படுகின்றனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சென்னிமலை, முகாசிபிடாரியூர், கொத்தம்பாளையம், கோவில்பாளையம், சூரபாளையம், வெள்ளியம்பாளையம், ஓலப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீடு, பிற கட்டடங்களுக்கு மின் பயன்பாடு கணக்கீட்டை, மின்வாரிய ஊழியர்கள் எடுக்கவில்லை.இதனால், பெரும்பாலான மின் நுகர்வோர், 'எந்த தேதியில் இருந்து, எந்த தேதிக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும்' என தெரியாமல் சிரமப்படுகின்றனர். அதேநேரம், 'மின் கட்டணம் செலுத்தவில்லை' எனக்கூறி, மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்தினர் வருவதால் அதிர்ச்சி அடைகின்றனர்.மேலும், மின்வாரியத்தில் தொகை செலுத்தும் இடத்துக்கு சென்றால், மின் மீட்டரில் உள்ள ரீடிங்கை மொபைல் போனில் போட்டோ எடுத்து வந்தால் மட்டுமே, கட்டணம் செலுத்த முடியும் எனக்கூறி திரும்ப அனுப்புகின்றனர். கிராமப்பகுதியில் ஆன்ட்ராய்டு மொபைல் போன் இல்லாதவர்கள், ரீடிங்கை சரியாக குறிக்க தெரியாதவர்கள், கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.இதுபற்றி பெருந்துறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தினர் கூறியதாவது: பெருந்துறை கோட்டத்துக்கு உட்பட்ட முகாசி பிடாரியூர் பிரிவு அலுவலகத்தில் கடந்த மாதம் மட்டும் ரீடிங் எடுக்க இயலாமல், தாமதம் ஏற்பட்டது. தற்போது விடுபட்ட மின் இணைப்புகளுக்கு ரீடிங் எடுக்கப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் சரியான நேரத்தில் ரீடிங் எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.