| ADDED : ஜன 29, 2024 12:06 PM
கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் சுற்றுலா பயணிகள் வருன்றனர். சில வாரங்களாக தடுப்பணை வழியாக, 100 கன அடி தண்ணீரே வெளியேறுகிறது. இதனால் குட்டையாக தண்ணீர் தேங்கி நிற்கும் பவானி ஆற்றில், பயணிகள் குளித்து செல்கின்றனர். அதேசமயம் அருவியில் குளிக்கும் கனவோடு வருவோர், கொட்டாத அருவியால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இவர்களில் சிலர் குறைந்தளவு தண்ணீரே வெளியேறுவதாக, நுழைவு கட்டணம் வசூலிக்கும் பகுதியிலேயே, தகவல் தெரிவித்திருக்கலாமே என பாசன உதவியாளர்களிடம் கேள்வி எழுப்புகின்றனர்.இதனால் பயணிகள் அறியும் வகையில், நீர்வள ஆதாரத்துறையினர், அறிவிப்பு தகவலை, நுழைவு வாயில் பகுதியில் பல இடங்களில் ஒட்டியுள்ளனர். அதில், 'பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் மற்றும் பாசனங்களுக்கு தண்ணீர் செல்வதால், கொடிவேரி நீர் வீழ்ச்சிக்கு தற்போது தண்ணீர் வருவதில்லை. மேலும், பவானிசாகர் அணை நீர் இருப்பு மற்றும் மழை பொழிவுக்கு தகுந்தாற்போல், அருவி பகுதியில் தண்ணீர் வழிவது மாறுபடும்' என தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பாலும், குறைந்தளவே தடுப்பணை வழியாக நேற்று தண்ணீர் வெளியேறியதாலும், பெரும்பாலான சுற்றுலா பயணிகள், அருவியில் குளிக்க ஆர்வம் காட்டவில்லை. அதேசமயம் பரிசல் பயணம் செய்ய, சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். இதனால் அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.