கோபி, கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் இருந்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனமாக, 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. கடந்த அக்.,24 முதல், இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நெல் நடவு பணியில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். ஏ.டி.டீ., 38, ஐ.ஆர்.,20, கோ-50, ஏ.எஸ்.டி., 16 ரக விதை நெல்லை நாற்றாங்காலில் விதைத்திருந்தனர். நாற்றாக முளைத்ததால் அதை பறித்து நடவு செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது.இதுகுறித்து பாசன விவசாயிகள் கூறியதாவது: நெல் நடவுப்பணிக்காக, டில்லர் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தை மூன்று முறை உழவு செய்ய ஏக்கருக்கு, 6,000 ரூபாய், பின் மாட்டின் மூலம் பரம்படிக்க ஏக்கருக்கு, 1,200 ரூபாயும் செலவாகிறது. அதாவது நடவுப்பணிக்கு ஏக்கருக்கு, 5,500 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் நடவுப்பணி முடிய மூன்று மணி நேரமாகிறது. இதுவரை இருபாசனங்களிலும், 15 சதவீதம் நெல் நடவுப்பணி முடிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.காலிங்கராயன் பாசனத்தில் அறுவடைஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ் நகர் அருகில், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில், நெல் அறுவடை தொடங்கியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தற்போது, 150 நாள் பயிரான பி.பி.டி., ரக நெல் நடவு செய்தோம். கதிர் முற்றிய நிலையில் அறுவடை தொடங்கியுள்ளது. இயந்திர வாகனம் மூலம் அறுவடை நடக்கிறது. வழக்கமாக ஏக்கருக்கு, 2,000 கிலோ நெல் கிடைக்கும். இந்தாண்டு, 1,200 கிலோதான் கிடைத்துள்ளது. கடந்தாண்டு கிலோ, 21 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்தாண்டு ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு, 3,000 ரூபாய் வாடகை கொடுக்க வேண்டி உள்ளது. செலவு, நஷ்டம் போன்றவற்றை ஈடு செய்யும் வகையில் விலை கிடைத்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு கூறினர்.