ஈரோடு, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு போதுமான பயிற்சி, கால அவகாசம், நிதி வழங்கவில்லை; பணிப்பளுவையும் குறைக்க கோரி, எஸ்.ஐ.ஆர்., பணியை மட்டும் வருவாய் துறையினர் நேற்று புறக்கணித்தனர்.தமிழகத்தில் கடந்த, 4ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கப்பட்டு வருகிறது. இதை டிச., 4 வரை திரும்ப பெற்று, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரித்து டிச.,9ல் வெளியிட உள்ளனர். இதற்கான பி.எல்.ஓ., - சூப்பர் வைசர், வாக்காளர் பதிவு அலுவலர் போன்ற நிலைகளில் வருவாய் துறையினர் பணி செய்கின்றனர். இவர்களே படிவம் வழங்கி, பெற்று விபரத்தை 'ஆப்'பில் உறுதி செய்ய வேண்டும். மேலும் அந்த வாக்காளர், 2002ல் ஓட்டுப்பதிவு செய்துள்ளார் எனில் அவரது விபரத்தை உறுதி செய்ய வேண்டும்.தொகுதி மாறியவர்கள், திருமணமாகி வரும் ஆண், பெண் வாக்காளர், வாரிசு என்ற அடிப்படையில் மகன், மகள் என வருவோரை, அவர்களது பெற்றோர், தாத்தா, பாட்டி போன்றோரின் விபரங்களை வைத்து உறுதி செய்யும் பணிகள் உள்ளன.மேலும், இப்பணிக்கு நிதி வழங்காததால், வருவாய் துறையினர் என்ற அடிப்படையில் அவர்களே அனைத்து நிதியையும் சொந்த செலவில் செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் எப்போது வழங்குகிறதோ, அப்போது திரும்ப பெற வேண்டும்.இதனால் தங்களது வழக்கமான பணிகளை மட்டும் நேற்று செய்ததுடன், எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்குதல், திரும்ப பெறுதல், அதற்கான கூட்டம், காணொலி காட்சி கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில், 2,500க்கும் மேற்பட்டோர் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.