| ADDED : மார் 04, 2024 07:28 AM
பவானி : வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலம், குசலம்பாறையை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேசன், 25; இவரின் மனைவி பூஜா, 21; பூஜாவுக்கு கடந்த மாதம், 16ம் தேதி, அந்தியூர் அரசு மருத்துவமனையில், பெண் குழந்தை பிறந்தது. மூன்று நாட்களுக்கு பிறகு, தாய்-சேய் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கடந்த மாதம், 23ம் தேதி நள்ளிரவில் குழந்தை வாயில் நுரை தள்ளி கிடந்துள்ளது. இதனால் குழந்தை இறந்ததாக கருதி அதிகாலையில் அதே பகுதி மயானத்தில் புதைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.இதனால் எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், நேரில் சென்று விசாரித்தனர். ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பிறந்த பெண் குழந்தையும், பிறந்த சில நாட்களில் புரையேறி இறந்தது தெரிந்தது. இரண்டாவதாக பிறந்த குழந்தையும் ஏழாவது நாளில் இறந்ததால், சந்தேகமடைந்தனர். இதனால் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்து அறிக்கை வழங்க உத்தரவிட்டனர்.இதையடுத்து எண்ணமங்கலம் மருத்துவர் சதீஸ்குமார், வெள்ளித்திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில், குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்தார். தற்போது வருவாய் துறையினர் ஸ்டிரைக் நடக்கிறது. போராட்டம் முடிந்தவுடன் அந்தியூர் தாசில்தார் முன்னிலையில், பிரேதத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.