ஈரோடு: ஈரோடு மாவட்டம் வேளாண் குறைதீர் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்த பின், பல்வேறு துறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுப்பணித்துறை அதிகாரிகள்: பவானிசாகர் அணையில் இருந்து அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வண்டல் மண் எடுக்க விதிமுறை உள்ளது. அனைத்து பகுதியினர் மண் எடுப்பது பற்றி கலெக்டருடன் ஆலோசிக்கப்படும். பவானிசாகர் அணையின் நீர் இருப்புக்கு ஏற்ப, பாசனத்துக்கு நீர் திறக்க முடிவு செய்யப்படும். காளிங்கராயன் வாய்க்கால் பகுதியில் விழுந்துள்ள தேக்கு மரங்களை ஏல விற்பனை செய்ய விலை பட்டியல் கோரப்பட்டுள்ளது, என்றனர்.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'லோக்சபா தேர்தல் மற்றும் பொதுத்தேர்வு நடந்ததால், மின் பராமரிப்பு பணி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பராமரிப்பு பணிகளுக்காகவே மின்தடை செய்யப்படுகிறது' என்றனர்.உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், ''தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் வசதி ஈரோடு மாநகராட்சி, சோலாரில் மட்டும் உள்ளது. ஊரக, உள்ளாட்சி அமைப்புகள் தெருநாய்களை பிடித்து, கால்நடை பராமரிப்பு துறையிடம் ஒப்படைத்தால், வெறிநோய் தடுப்பூசி மட்டும் போடப்படும்,'' என்றனர்.பிற துறையினர் கூறியதாவது: வனத்துறையிடம் தற்போது, 20,000 மரக்கன்றுகள் உள்ளன. தேவையான விவசாயிகள், உழவன் செயலி மூலம் பதிவு செய்து இலவசமாக பெறலாம். ஆவின் கால்நடை தீவனம் தட்டுப்பாடு இல்லை. கரும்பு விவசாயிகள் பிரச்னை தொடர்பாக, விரைவில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும். 100 நாள் வேலை திட்ட பணித்தல பொறுப்பாளர்கள், 100 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக்கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, சீல் வைக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில், 140 சாய, சலவை ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.அப்போறு குறுக்கிட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ''மாசுகட்டுப்பாட்டு வாரிய செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. காளிங்கராயன் கால்வாய் துார்வாரும்போது அதில் கழிவு நீர் அதிகம் இருந்ததாக படத்துடன் எனக்கு அனுப்பி உள்ளனர்,'' என்றார்.