ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வியாழன் தோறும் நடக்கும் மாட்டு சந்தையில், 850க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாகும். நேற்றைய சந்தைக்கு தங்களது மாடுகளை விற்பனை செய்ய உசிலம்பட்டி விவசாயிகள், மூன்று மாடுகளுடன் வந்தனர். மாடு விற்ற பணத்துடன், டாடா ஏஸ் வாகனத்தில் உசிலம்பட்டிக்கு புறப்பட்டனர்.ஈரோடு, ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்றபோது, தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். உசிலம்பட்டி, தொட்டம்பட்டி தமிழ்பாண்டியிடம், 50,000 ரூபாய், குமாரிடம், 36,500 ரூபாய், விஜயகுமாரிடம், 40,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதற்கான ஆவணங்களை காண்பிடித்து, கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டு பெற்று கொள்ளும்படி ரசீது வழங்கினர். இதனால் கலெக்டர் அலுவலகம் சென்றனர். பணத்துக்கு என்ன ஆவணத்தை காண்பிப்பது என தெரியாமல் பரிதவித்தனர். இதேபோல் மாடு வாங்க வந்த, விற்க வந்த என, 10க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் முறையிட்டுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதி கிராமத்தில் வசிக்கும் எங்களுக்கு தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் மாட்டு சந்தை, ஆட்டு சந்தை, மார்க்கெட் போன்றவைகளை மூடிவைத்தால், இதுபோன்ற விபரம் தெரியவரும். தவிர மாடு விற்றோம் என்பதை, அழைத்து சென்ற காண்பிக்க தயாராக இருந்தாலும், அதிகாரிகள் அடம் பிடித்து, சாப்பிடக்கூட பணம் இல்லாதபடி பறிமுதல் செய்துவிட்டனர். இவ்வாறு கூறினர்.