உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாரியூர் குண்டம் விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தயாராகும் திருநீறு மண்

பாரியூர் குண்டம் விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தயாராகும் திருநீறு மண்

கோபி: குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பாரியூர் அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வழங்க, திருநீறு மண் சலித்து தயார்படுத்தும் பணி நடக்கிறது.கோபி அருகே, பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில், அம்மன் சன்னதி எதிரே, 60 ஆடி நீளத்தில் குண்டம் அமைந்துள்ளது. அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, தீபாராதனை முடிந்து விபூதியாக திருநீறு (மண்) வழங்கப்படுகிறது. அதனுடன் மஞ்சள், குங்குமமும் வழங்கப்படுகிறது.கோவிலுக்கு சொந்தமான இடம் தேர் வீதியில் உள்ளது. அங்கிருந்து காலங்காலமாக, தேவைக்கேற்ப திருநீறு மண் எடுத்து வந்து, கற்கள் நீக்கி, சுத்தமாக சலித்து, பூஜைக்கு பின் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் மஞ்சள் ஈரோட்டில் இருந்து, மாதத்துக்கு ஐந்து கிலோவும், குங்குமம் பண்ணாரியில் இருந்து மூன்று கிலோவும் வாங்கி வருகின்றனர். நடப்பாண்டு குண்டம் திருவிழா கடந்த டிச.,28ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது.முக்கிய நிகழ்வாக, நாளை (ஜன.,11ல்) பக்தர்கள் குண்டம் இறங்கும் திருவிழா நடப்பதால், தேர் வீதியில் இருந்து இரண்டு யூனிட் அளவுக்கு திருநீறு மண் எடுத்து வரப்பட்டுள்ளது. ஆகம விதிப்படி, திருநீறு மண்ணுக்கு, கற்பூரம் ஏற்றி பூஜை செய்து, பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.குண்டம் விழாவை முன்னிட்டு, ஏழு டன் அளவுக்கு எரிக்கரும்பு எனும் ஊஞ்சமரக்கட்டைகள் குவிக்கப்பட்டுள்ளது. பூ மிதிக்க காத்திருக்கும் பக்தர்கள், வரிசையை கடைப்பிடிக்க வசதியாக. கோவில் வடக்கு வாயில் பகுதியில், இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.பாரியூர் கோவில் வளாகம் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி