| ADDED : ஜூலை 02, 2024 11:19 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் குடிநீர் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த க.அலம்பளம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்கு 27 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதற்கான நிர்வாக அனுமதி பெறும் நடவடிக்கை குறித்து கலெக்டர் பிரசாந்த் நேற்று கள ஆய்வு செய்தார்.அதில் நிர்வாக அனுமதிக்கான கோப்பினை அனுப்பி வைத்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதேபோல் சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் உள்ள தொழிற்பேட்டையில் சாலை வசதி, தொழில் வாய்ப்புகள் துவங்குதல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து, தற்போதைய நிலைகள் பற்றி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின், செம்பராம்பட்டு ஊராட்சியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட உள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி. வளையாம்பட்டு ஊராட்சியில் 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணி ஆகியவற்றை செய்தார். ஆய்வில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளில் முக்கியமாக விளங்கும் குடிநீர் பயன்பாட்டு பணிகளை குறிப்பிட்ட காலங்களுக்குள் தரமாக செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குழாய்கள் அமைத்து சீரான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட வேண்டும் என்று அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.ஆய்வின் போது பி.டி.ஓ.,க்கள் ரங்கராஜன், செல்வகணேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.