| ADDED : ஆக 14, 2024 05:43 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த உலகலப்பாடியில் டாஸ்மாக் கடையை பூட்டு போடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த உலகலப்பாடியில் இருந்து அருளம்பாடி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்குகிறது. இந்த கடைக்கு வரும் குடிமகன்கள் அருகிலுள்ள விவசாய நிலங்களில் அமர்ந்து குடித்துவிட்டு காலி மது பாட்டில்களை உடைத்து வீசி செல்கின்றனர். தட்டி கேட்பவர்களை திட்டி, தாக்குகின்றனர்.கடந்த வாரம் ஒரு விவசாயியை அடித்து கையை உடைத்த குடிமகன்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அப்பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என, ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் பொது மக்கள் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த வட பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, மண்டல துணை தாசில்தார் பாலசுப்ரமணியம், வருவாய் ஆய்வாளர் நிறைமதி, வி.ஏ.ஓ., சரவணன் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.பொது மக்கள் ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர். பொது மக்கள் டாஸ்மாக் கடை முன், படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சங்கராபுரம் தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் பொது மக்களிடம் சமரசம் பேசி, ஒரு வார காலத்தில் இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார்.அதன் பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.