உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கலெக்டர் அலுவலகத்திற்கு கமிட்டி கட்டடம் கபளீகரம்; வர்த்தகத்தை நிறுத்தி வியாபாரிகள் போராட்டம்

கலெக்டர் அலுவலகத்திற்கு கமிட்டி கட்டடம் கபளீகரம்; வர்த்தகத்தை நிறுத்தி வியாபாரிகள் போராட்டம்

கள்ளக்குறிச்சி : கலெக்டர் அலுவலக பயன்பாட்டிற்கு, மார்க்கெட் கமிட்டியில் இருந்து மேலும் கட்டடத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து வியாபாரிகள் நேற்று ஒருநாள் வர்த்தக நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்குள்ள பல்வேறு கட்டடங்களும் கலெக்டர் அலுவலக பயன்பாட்டிற்கு படிப்படியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.அத்துடன் கமிட்டிக்கான நுழைவு வாயிலை கலெக்டர் அலுவலகத்திற்கானதாக மாற்றம் செய்துள்ளனர். இதனால் கமிட்டியில் பொருட்களை சுலபமாக கையாள முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விளைபொருட்களை கமிட்டிக்கு எடுத்து வர முடியாமல் விவசாயிகளும், பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் வர்த்தகர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் இறந்த நிலையில் அரசு அதனை விசாரிக்க ஒரு நபர் கமிஷன் ஏற்பாடு செய்தது. இதற்காக கமிட்டி வளாகத்தில் உள்ள விவசாயிகள் ஓய்வு எடுக்கும் அறை கலெக்டர் அலுவலக பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே இடமின்றி பரிதவித்த வர்த்தகர்கள் இதனையறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்டிக்கும் விதமாக நேற்று ஒருநாள் வர்த்தகத்தை நிறுத்திவைத்து போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை செயலாளர் சந்துரு நேரில் வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கமிட்டியின் கட்டடங்கள் படிப்படியாக கலெக்டர் அலுவலக பயன்பாட்டிற்கு செல்வதால் கமிட்டியில் வர்த்தக பாதிப்புகள் குறித்து தெரிவித்தனர். அதனையேற்று வேளாண் வணிகத்துறை செயலாளர் சந்துரு மற்றும் வர்த்தகர்கள் கலெக்டர் பிரசாந்த்திடம் மனு அளிக்க சென்றனர். அவர்களிடம் பேசிய கலெக்டர், கள்ளச்சாராய இறப்பு குறித்து விசாரணை நடத்த ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பயன்பாட்டிற்குத்தான் இந்த கட்டடம் எடுக்கப்படுகிறது.விசாரணை முடிந்தவுடன் அந்த கட்டடம் மீண்டும் உங்களிடம் ஒப்படைக்கப்படும். அத்துடன் இன்னும் 10 நாட்களில் வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள பரிவர்த்தனை கூடத்தையும், கமிட்டியின் வழிப்பாதையையும் சரிசெய்து உங்களிடம் ஒப்படைக்கிறோம் என உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து வர்த்தகர்கள் போராட்டத்தை கைவிட்டு இன்று முதல் வர்த்தகத்தை மீண்டும் தொடர்வதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை