| ADDED : டிச 28, 2025 06:41 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நவம்பர் மாதம் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 14ம் தேதி முடிந்தது. தொடர்ந்து, கடந்த 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட நபர்கள், ஜனவரி 1ம் தேதி தினத்தன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் பட்டியலில் இருப்பவர்களில் பெயர், உறவுமுறை மற்றும் முகவரியில் திருத்தம் மேற்கொள்ள செய்யும் நபர்களுக்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் 1,435 ஓட்டுச்சாவடி மையங்களிலும் நேற்று நடந்தது. இதில், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, படிவத்தில் உள்ள கேள்விகளுக்கு சரியாக நிரப்புகிறார்களா என்பது குறித்து கேட்டறிந்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் இன்று 28ம் தேதி, ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. மேலும், வாக்காளர் பட்டியலில் சேரவும், நீக்கம் செய்யவும், திருத்தம் மேற்கொள்ளவும் https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மூரார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.