உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியை தரம் உயர்த்த...  கோரிக்கை;   பேரூராட்சியாக மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியை தரம் உயர்த்த...  கோரிக்கை;   பேரூராட்சியாக மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியை தரம் உயர்த்தி பேரூராட்சியாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் சுமார் 6000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ந்து வரும் ஊராட்சிகளில், மூங்கில்துறைப்பட்டு முதல் இடத்தில் உள்ளது. இந்த ஊராட்சி வணிக ரீதியிலும், தொழில் ரீதியாகவும், கல்வி நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் வளர்ந்து வருகிறது. மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி சுற்றி சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையப்பகுதியாக அமைந்துள்ளது. இந்த 40 கிராமங்களுக்கும், சங்கராபுரம், வாணாபுரம் ஆகிய இரண்டு ஒன்றிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. மூங்கில்துறைப்பட்டில் இருந்து சங்கராபுரம் ஒன்றிய அலுவலகம் 22 கி.மீ., துாரம் கொண்டது. வாணாபுரம் ஒன்றிய அலுவலகம் 25கி.மீ., துாரம் கொண்டது. இதில்,சங்கராபுரம் ஒன்றியத்திற்கு செல்ல பஸ் வசதி உள்ளது. ஆனால் வாணாபுரம் ஒன்றியத்திற்கு செல்ல போதிய பஸ் வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெறும் அவதி அடைந்து வருகின்றனர். பொதுமக்கள் ஊராட்சி சம்பந்தமான வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்றால், பஸ்சுக்காக காத்து ஒரு நாளில் முடிய வேண்டிய வேலை இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மூங்கில்துறைப்பட்டு பேரூராட்சியாக மாற்றப்பட்டால், சுற்றுவட்டார பகுதியில் உள்ள 40 கிராம மக்கள், ஊராட்சி பணிகளுக்காக நீண்ட துாரம் செல்ல வேண்டியதில்லை. தங்களின் கிராமம் அருகிலே ஊராட்சி வேலைகளை முடித்து கொள்ள முடியும். மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி எல்லா விதத்திலும் பேரூராட்சியாக மாறுவதற்கு தகுதி இருந்தும் இதுநாள் வரை பேரூராட்சியாக மாற்ற அரசியல் கட்சிகள் தடையாக உள்ளன. மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளதால், எந்த ஒரு அரசு சம்பந்தமான நிறுவனங்கள் கொண்டு வராமல் அரசு தடை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மூங்கில்துறைப்பட்டு பொதுமக்கள் கூறுகையில்; ஊராட்சியில் 4,000 திற்கும் மேற்பட்ட ஓட்டுரிமை உடைய குடிமக்கள் உள்ளனர். அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் இதுவரை இந்த ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றக்கூடாது. இப்பகுதி உள்ளூர் அரசியல்வாதிகளும், தற்போது ஆட்சியில் இருப்போரும், ஏற்கனே ஆட்சியில் இருந்தவர்களும் மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியை கண்டுகொள்ளாதது வேதனை அளிக்கிறது என கூறினர். மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியை தரம் உயர்த்தி, வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பேரூராட்சியாக மாற்றினால் இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர். எனவே, பேரூராட்சியாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை