உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வியாபாரிகள், பொதுமக்கள் வருகை நாளுக்கு நாள் குறைகிறது! களை இழக்கும் 100 ஆண்டு பழமையான வார சந்தை

வியாபாரிகள், பொதுமக்கள் வருகை நாளுக்கு நாள் குறைகிறது! களை இழக்கும் 100 ஆண்டு பழமையான வார சந்தை

தியாகதுருகம்: தியாகதுருகத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் வார சந்தை துவங்கியதையடுத்து தியாகதுருகம் வார சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் வருகை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் நுாறு ஆண்டு பழமையான வார சந்தை களை இழந்து வருகிறது.தியாகதுருகம் பஸ் நிலையத்தையொட்டி, சனிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெற்று வருகிறது. கடந்த 100 ஆண்டுகளாக நடைபெறும் இச்சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கால்நடை விற்பனை அதிக அளவில் நடைபெறும்.சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கிச் செல்வர். அதே போல் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்வது வழக்கம்.வெளியூர் வியாபாரிகளும் அதிக அளவில் வந்து போட்டி போட்டு கால்நடைகளை வாங்கிச் செல்வது வழக்கம். இதனால் சனிக்கிழமைகளில் தியாகதுருகம் நகரில் திருவிழா போல் மக்கள் கூட்டம் அலைமோதும்.தியாகதுருகம் பேரூராட்சி மூலம் 3 ஆண்டுக்கு ஒரு முறை வார சந்தை குத்தகை ஏலம் விடப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டு வார சந்தை குத்தகை எடுப்பதில் ஆரோக்கியமான போட்டி இருந்ததால் 5 லட்சம் ரூபாய்க்கும் 2015ம் ஆண்டு 10 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது.கடந்த 9 ஆண்டுகளாக வார சந்தை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வார சந்தை குத்தகை எடுப்பதை சிலர் கவுரவமாக கருதுவதால் குத்தகை எடுப்பதில் கடும் போட்டா போட்டி நிலவும்.இதில் அரசியல் பின்புலமும் இருப்பதால் 3 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பொது ஏலத்தின்போது கடும் போட்டி ஏற்பட்டு ஏலத்தொகை பன்மடங்காக உயரும். கடந்த 2015ம் ஆண்டு 10 லட்சம் ரூபாயில் இருந்த ஏலத்தொகை 2018ம் ஆண்டு 3 மடங்காக உயர்ந்து 30 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கு குத்தகை விடப்பட்டது.கடந்த 2021ம் ஆண்டு வார சந்தை ஏலத்தில் ஏற்பட்ட போட்டியால் 47 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஜி.எஸ்.டி., வரி உட்பட 50 லட்சம் ரூபாயை பேரூராட்சிக்கு ஆண்டுதோறும் செலுத்த வேண்டும்.இதனால் பேரூராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்தாலும் குத்தகை எடுத்தவர்கள் அந்தத் தொகையை ஈட்ட முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தியாகதுருகத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வார சந்தை புதிதாக துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.அதன்படி ரிஷிவந்தியம், எலவனாசூர்கோட்டை, கெடிலம், நாகலுார், கூத்தக்குடி உள்ளிட்ட கிராமங்களில் வார சந்தை துவக்கப்பட்டு நடந்து வருகிறது. இதன் காரணமாக தியாகதுருகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துபோனது.அதேபோல் ஆடு, மாடு வளர்ப்பதில் விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. உழவுப் பணிகளில் அதிகளவில் இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் கால்நடைகளின் பயன்பாடு குறைந்தது.பால் உற்பத்திக்காக பசு மாடுகளை மட்டுமே வளர்க்கின்றனர். எருமை மாடுகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. இதனால் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருவதும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும், அத்தியாவசிய பொருட்களின் கடைகளின் எண்ணிக்கையும் குறைந்தது.நுாறாண்டுகள் பழமையான தியாகதுருகம் வார மக்கள் வருகை குறைந்து சந்தை களையிழந்து வருகிறது. இதனால் குத்தகை எடுத்தவர்களுக்கு வருவாய் குறைந்து கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புலம்பி வருகின்றனர்.இதே நிலை நீடித்தால் வரும் மார்ச் மாதம் நடைபெறும் வார சந்தை குத்தகையை அதிக விலைக்கு ஏலம் எடுக்க பலர் தயக்கம் காட்டுவார்கள் என தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை