| ADDED : ஜூலை 05, 2024 12:04 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 761 ஏரிகளில், 579 ஏரிகளில், 25 சதவீதம் தண்ணீர் கூட இல்லாத நிலை உள்ளது.தமிழகத்தில் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக காஞ்சிபுரம் உள்ளது. ஏரி பாசனத்தை நம்பி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயிரிடப்படுகின்றன.இத்தகைய சூழலில், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக, ஏரிகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து, விவசாயத்திற்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.நவரை பருவம் முடிந்த நிலையில், சொர்ணாவாரி, சம்பா ஆகிய பருவத்திற்கு தேவையான தண்ணீர், ஏரிகளில் இல்லாததால், விவசாயிகள் செய்வதறியாமல் புலம்பி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில், 380 ஏரிகள் உள்ளன. இதில், 60 ஏரிகளில் 25- - 50 சதவீதம் தண்ணீர் உள்ளது. மீதமுள்ள 320 ஏரிகளிலும், 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தண்ணீர் இருப்பதாக வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர்.அதேபோல, நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன. இதில், 50- - 75 சதவீதம்வரை 29 ஏரிகளும், 25- - 50 சதவீதம் வரை 93 ஏரிகளிலும் தண்ணீர் உள்ளது. மீதமுள்ள 259 ஏரிகளிலும், 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தண்ணீர் இருப்பு உள்ளது தெரியவந்துள்ளது.ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஆகிய இரு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 761 ஏரிகளில், 579 ஏரிகளில், 25 சதவீதம் தண்ணீர்கூட இல்லாத நிலையே இப்போது உள்ளது.