| ADDED : மே 28, 2024 03:57 AM
அம்பத்துார் : அம்பத்துார், விஜயலட்சுமிபுரம் மணி தெருவில் அமைந்துள்ள பழைய மரக்கிடங்கில், செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, செங்குன்றம் வனசரக அதிகாரி எடிசனுக்கு தகவல் கிடைத்தது.அவர் தலைமையிலான குழுவினர், அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில், 550 கிலோ அளவிலான 41 செம்மரக் கட்டைகள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த வனசரக அதிகாரிகள், அம்பத்துார் எஸ்.வி.நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், 46, என்பவரிடம் விசாரித்தனர்.இதில், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தில் இருந்து 60,000 ரூபாய்க்கு, மரக்கட்டைகளை வாங்கி வந்ததாக தெரிவித்தார். மேலும், அங்கு மாட்டு கொட்டகைக்காக பயன்படுத்தப்பட்ட இந்த கட்டைகள், பார்ப்பதற்கு நன்றாக இருந்ததாகவும், செம்மரக்கட்டை என அறியாமலேயே வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.செம்மரக்கட்டைகளின் மதிப்பு தெரியாமல், அதை மாட்டு கொட்டாயாக பயன்படுத்திய விவகாரம் வனச்சரக அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு, 3 லட்ச ரூபாய்.