| ADDED : ஏப் 28, 2024 01:29 AM
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து பவழக்கால் சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் எழுந்தருளிய சுந்தர வரதராஜ பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.இதில், மூன்றாம் நாள் உற்சவமான கருடசேவை, கடந்த 19ம் தேதி காலையிலும், ஹனுமந்த வாகன உற்சவமும் இரவிலும் விமரிசையாக நடந்தது.பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் உற்சவமான தேரோட்டம், கடந்த 23ம் தேதி விமரிசையாக நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய சுந்தர வரதராஜ பெருமாள் பெருமாள் முக்கிய வீதி வழியாக பவனி வந்தார்.கடந்த 25ம் தேதி, ஒன்பதாம் நாள் உற்சவமான தீர்த்தவாரியும், இரவு வெட்டிவேர் சப்பரம் நடந்தது.நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை அலங்கார திருமஞ்சனமும், இரவு த்வாதச ஆராதனத்துடன், கடந்த 10 நாட்களாக நடந்த சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.