| ADDED : மே 13, 2024 12:49 AM
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது ஆத்தங்கரை கிராமம். இந்த கிராமத்திற்கான குடிநீர் தேவைக்கு சீட்டணஞ்சேரி பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.அதில் உறிஞ்சப்படும் தண்ணீர், பூமிக்கடியில் புதைத்த பைப் வாயிலாக ஆத்தங்கரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி அதன் மூலம் வீட்டு குழாய்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், சீட்டணஞ்சேரி பாலாற்றில் இருந்து,ஆத்தங்கரை பகுதிக்கு தண்ணீர் வரும் பைப்களில், வழியில் நிலம் வைத்துள்ள விவசாயிகள் சிலர், ஆங்காங்கே துளையிட்டு திருட்டுத்தனமாக இணைப்புகள் பொருத்தி தங்கள் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதாக தெரிகிறது.இதனால், ஆத்தங்கரை கிராமத்திற்கு போதுமான அளவு குடிநீர் வினியோகிக்க முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, சீட்டணஞ்சேரி பாலாற்றில் இருந்து ஆத்தங்கரை பகுதிக்கு பூமிக்கடியில் புதைந்துள்ள பிவிசி குடிநீர் பைப்களை, இரும்பாலான பைப்களாக மாற்ற வேண்டும். இதன் மூலம் திருட்டு குழாய் இணைப்புகள் ஏற்படுத்துவதை தடுக்கலாம் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.