மாமல்லபுரம்:பாலாறு கர்நாடக மாநிலத்தில் தோன்றி, தமிழகத்தின் வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வழியே கடந்து, கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் பகுதியில், வங்க கடலில் கலக்கிறது.ஆற்றில், அரசு மணல் குவாரி நடத்தியும், கரையோர பகுதியினர் மணல் கடத்தியும், மணல் சுரண்டப்பட்டது. அதலபாதாள சுரங்க பள்ளமாக மாறி ஆறு பாழானது.இதன் காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. சுனாமி அலை தாக்குதலுக்கு பின், கடல் நீர் ஊடுருவலும் அதிகரித்தது.பருவமழை காலத்தில் பெருக்கெடுக்கும் மழைநீர், ஆற்றில் தேங்க இயலாமல், கடலில் கலந்து வீணானது. முகத்துவார பகுதியில், தடுப்பணை அமைய வேண்டிய அவசியம் குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. கரையோர பகுதியினரும் போராடினர்.இந்நிலையில், கல்பாக்கம் அணுசக்தி துறை தேவைகளுக்கு, பாலாற்று நீரையே பொதுப்பணித்துறை வினியோகிக்கிறது.அத்துறையின் தண்ணீர் தேவை அதிகரித்த சூழலில், ஆற்று முகத்துவார பகுதியில் நீர்செறிவூட்டல் தடுப்பணை அமைக்க, பொதுப்பணித்துறை முடிவெடுத்தது.இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு, அணுசக்தி துறையிடம் வலியுறுத்தியது. அத்துறையும் நீராதார தேவை கருதி, 32.50 கோடி ரூபாய் வழங்கி, தடுப்பணையை ஐ.ஐ.டி., வடிவமைத்த அமைப்பில் அமைக்க பரிந்துரைத்தது.இதையடுத்து, பொதுப்பணித்துறை, 1,200 மீ., நீளம், 5 அடி உயரத்தில் தடுப்பணை அமைக்கும் பணிகளை, கடந்த 2019ல் துவக்கி முடித்தது. அதே ஆண்டு, நவ., - டிச.,ல் மழையில், அதன் 1 டி.எம்.சி., கொள்ளளவிற்கு நிரம்பி, சில கி.மீ., வரை பரவியது.அதைத்தொடர்ந்து, ஆண்டுதோறுமே மழைநீர் நிரம்பி, சில மாதங்கள் வரை, முழு கொள்ளளவில் இருக்கும். பின், நீர்மட்டம் சற்று குறையும். கோடை மழை பெய்தால், கடும் கோடையிலும் அணை நிரம்பும்.புதுச்சேரி சாலைக்கு, 500 மீ., கிழக்கில் தடுப்பணை அமைந்துள்ள நிலையில், ரம்மிய நீர்த்தேக்கமாக காட்சியளிக்கிறது. புதுச்சேரி, சென்னை நோக்கி செல்லும் பயணியர், 1 கி.மீ., ஆற்று பாலத்தை கடக்கும்போது, நீர்த்தேக்கத்தை கண்டு ரசிக்கின்றனர்.தனி வாகன பயணியர், சாலை பகுதியில் வாகனத்தை நிறுத்தி, அணை பகுதிக்கு சென்று ரசிக்கின்றனர். வார இறுதி நாட்களில், பயணியர் அணை நீரில் குளிக்கின்றனர்.கடலுார் ஆற்றங்கரை பகுதியில், அழகிய பூங்கா வளாகம் அமைத்து, சுற்றுலாவிற்கு மேம்படுத்தலாம். பயன்பாடற்ற பழைய ஆற்றுப்பாலத்தில், குடிமகன்கள் குப்பை குவித்து சீரழிக்கின்றனர்.இதில் நின்று நீர்த்தேக்கத்தை ரசிக்கவும் ஏற்பாடு செய்யலாம். இத்தகைய மேம்பாட்டிற்கு பயணியரும் எதிர்பார்க்கின்றனர்.