| ADDED : மே 13, 2024 05:52 AM
மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோவில். கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.உற்சவர் பிரகலாத வரதராக வீற்றிருக்கின்றார். ஆண்டாள் நாச்சியார், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகளுக்கு என, தனித்தனி சன்னிதிகள் உள்ளன.இங்கு, ஆண்டுதோறும் முக்கிய உற்சவமாக, வைகாசி பிரம்மோற்சவம் 10 நாட்களும், அதனை தொடர்ந்து மூன்று நாட்கள் விடையாற்றி உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.இதனையடுத்து, நேற்று மாலை அங்குரார்ப்பணம் நடைபெற்றது. இன்று காலை கொடியேற்றத்துடன் இவ்விழா துவங்கப்பட உள்ளது. மே 27ம் தேதி வரை, தினமும் உற்சவங்கள் நடக்கின்றன.விழாவின் முக்கிய உற்சவங்களாக, 15ம் தேதி காலை கருடசேவை; 17ம் தேதி யாளி வாகன உற்சவம்; 18ம் தேதி மாலை யானை வாகனம் உற்சவம் உள்ளிட்டவை, வாணவேடிக்கையுடன் நடைபெற உள்ளது.பின், 19ம் தேதி காலை, முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. 21ம் தேதி தீர்த்தவாரி பல்லக்கு உற்சவம் உள்ளிட்டவை வரிசையாக நடைபெற உள்ளன.