காஞ்சிபுரம்:உத்திரமேரூர் ஒன்றியம், அகரம் துாளிக்கு, மேல்துாளி கிராமம் வழியாக, உத்திரமேரூர் பணிமனையில் இருந்து தடம் எண்: 89ஏ என்ற அரசு பேருந்து 4 நடையும், திருவண்ணாமலை மண்டலம், வந்தவாசி பணிமனையில் இருந்து தடம் எண்: 146 மற்றும் 6 என்ற அரசு பேருந்து, 6 நடையும் இயக்கப்பட்டு வந்தது.இதனால், அகரம் மேல்துாளியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அத்தியாவசியம் மற்றும் அவசிய தேவைக்காக உத்திரமேரூருக்கு சென்று வந்தனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கின்போது அனைத்து பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.ஊரடங்கு தளர்வுக்கு பின், தடம் எண்: 89ஏ அரசு பேருந்து மட்டும், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்காக காலை 8:00 மணிக்கும், மாலை 6:00 மணிக்கும் வந்து அகரம் துாளிக்கு வந்து செல்கிறது.ஆனால், வந்தவாசி பணினை பேருந்தான தடம் எண்: 146, 6 ஆகிய பேருந்து இயக்கப்படவில்லை. இதனால், மேல்துாளியை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர், காலை 8:00 மணிக்கு மேல், பேருந்து வசதி இல்லாததால், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, வேலைக்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம் என, கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, உத்திரமேரூர் பணிமனை பேருந்தான தடம் எண்: 89ஏ பேருந்து கூடுதல் நடை இயக்கவும், வந்தவாசி பணிமனையில் இருந்து நிறுத்தப்பட்ட, தடம் எண்: 146, 6 ஆகிய பேருந்துகளை வழக்கம்போல மீண்டும் அகரம் மேல்துாளி வழியாக சென்னைக்கு இயக்க வேண்டும் என, 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.