| ADDED : டிச 03, 2025 07:00 AM
சென்னை: மும்பையில் நடந்த தேசிய கிரிக்கெட் ஒரு நாள் தொடரை, தமிழக அணி கைப்பற்றி, சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தேசிய கிரிக்கெட் ஒருநாள் தொடர் போட்டிகள், நாட்டின் பல்வேறு மைதானங்களில் நடந்தன. பல மாநில அணிகள் போட்டியிட்டன. இதன் 'லீக்' போட்டிகளில் அசத்திய தமிழக அணி, தன் காலிறுதி போட்டியில் ஆந்திர மாநில அணியுடன் மோதியது. இதில் தமிழக அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில், மேற்கு வங்க அணியுடன் மோதி, 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில், தமிழகம், உ.பி., அணிகள் களமிறங்கின. இதில், 'டாஸ்' வென்ற உ.பி., அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தமிழக அணி வீரர்கள் களமிறங்கி, முகமது அலி - 57, மானவ் பராக் - 57, அதிஷ் - 53, ஆகியோர் அரைசதம் அடித்தனர். முடிவில் 49.3 ஓவர்களில் 297 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த உ.பி., அணியில் பிரசாந்த் வீர் - 87, சமீர் ரிஸ்வி - 41 ரன்கள் எடுத்தனர். எனினும், 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே உ.பி., அணியால் எடுக்க முடிந்தது. இதனால் தமிழக அணி 56 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று , சாம்பியன் பட்டத்தை வென்றது.