| ADDED : பிப் 06, 2024 04:45 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சியில், அ.தி.மு.க., - சுயேட்சை கவுன்சிலர்கள் செயல்படும் வார்டுகளில், வளர்ச்சி பணிகளுக்கு, மேயர், கமிஷனர் ஆகியோர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நீண்ட நாட்களாகவே எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும் இப்பிரச்னைகள் பற்றி எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் பேசி வாக்குவாதம் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் அமர்ந்து, அ.தி.மு.க., - பா.ம.க., - சுயேட்சை - பா.ஜ.,வைச்சேர்ந்த கவுன்சிலர்கள் சிந்தன், புனிதா, சாந்தி, சரஸ்வதி, மவுலி, சூர்யா, விஜிதா உள்ளிட்டோர் காலை முதல் இரவு வரை போராட்டம் நடத்தினர்.மாநகராட்சி வாசலிலேயே, கவுன்சிலர்கள் மதிய உணவு சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.'தங்களது வார்டுகளில் வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும்; பொதுக்கழிப்பறைகளை ஏலம் விட வேண்டும்; மாநகராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.இதற்கிடையே, மாநகராட்சி பொறியாளர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்தினர்.