312 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.86.31 லட்சம் விடுவிப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 312 விவசாயிகளுக்கு, 86.31 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திர மேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து வட்டாரங்கள் உள்ளன. இதில், 312 விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு கரும்பு சாகுபடி செய்து, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். இந்த கரும்பு உற்பத்தி செய்தமைக்கு, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து, ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 312 விவசாயிகள் உற்பத்தி செய்த, 24,733 டன் கரும்பிற்கு, 86.31 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அவரவரின் வங்கி கணக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது என, இணைப் பதிவாளர் குமரேஸ்வரி தெரிவித்துள்ளார்.