சென்னை:கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ ரயில் திட்டம், 20,400 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 'டெண்டர்' வெளியிட்டுள்ளது.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் அனைத்தும், வரும் 2028ம் ஆண்டிற்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார் - பரந்துார் 50 கி.மீ., துாரம், கோயம்பேடு - ஆவடிக்கு திருமங்கலம், முகப்பேர் வழியாக 17 கி.மீ., மற்றும் சிறுசேரி - கிளாம்பாக்கத்திற்கு கேளம்பாக்கம் வழியாக 26 கி.மீ., என, 93 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் நீட்டிப்பு செய்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கை, கடந்த மாதம் 5ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.இதை ஆய்வு செய்த தமிழக அரசு, ஆவடி - கோயம்பேடு, பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார் - பரந்துார், கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியிட்டுள்ளோம். மெட்ரோ ரயில் தடத்தில் தற்போதைய நிலவரப்படி, ஸ்ரீபெரும்புதுார் வரையில், பயணியர் நெரிசல் அதிகமாக இருக்கும்.பரந்துார் விமான நிலையம் அமையும் போது, மேலும் இந்த தடத்தில் கூட்டம் அதிகரிக்கும். இந்த தடத்தில் பெரும்பாலும் மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிட்டுள்ளோம்.இதேபோல், அதிக நெரிசல்மிக்க வழித்தடமாக இருக்கும் கோயம்பேடு - ஆவடிக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை, விரைவில் துவங்க உள்ளோம்.இந்த அறிக்கையை, அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில், அரசிடம் அளிக்க உள்ளோம். தோராயமாக கோயம்பேடு - ஆவடி திட்டத்திற்கு 6,400 கோடி ரூபாய், பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோவுக்கு 14,000 கோடி ரூபாய் ஆகும் என, திட்ட மதிப்பீடு தயாரித்துள்ளோம்.விரிவான திட்ட அறிக்கையில் மேம்பால பாதை, சுரங்கப்பாதை வழித்தடங்கள், ரயில் நிலையங்கள், திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விபரங்கள் இதில் இடம்பெறும்.இதற்கான ஒப்புதலை பெற்ற பிறகே, மெட்ரோ திட்டத்திற்கான கட்டுமான பணிகளை துவங்குவோம். துவக்கிய நான்கு ஆண்டுகளில், பணிகளை முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்த மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் போது, சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் இடங்கள்
* பூந்தமல்லி - பரந்துார் வழித்தடம்நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், திருமழிசை, பாப்பன்சத்திரம், செட்டிபேடு, தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, பென்னலுார், ஸ்ரீபெரும்புதுார், சிப்காட், மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம்* கோயம்பேடு - ஆவடி வழித்தடம்பாடி புதுநகர், பார்க் ரோடு, கோல்டன் பிளாட்ஸ், வாவின், அம்பத்துார் எஸ்டேட் பேருந்து நிலையம், அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேன்ஜ், டன்லப், அம்பத்துார் ரயில் நிலையம், அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம், ஸ்டெட்போர்டு மருத்துவமனை திருமுல்லைவாயில், வைஷ்ணவி நகர், முருகப்பா பாலிடெக்னிக்