உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஏகாம்பரர் கோவிலுக்கு புது தங்கத்தேர் செல்வதில் சிக்கல் மின் ஒயர்கள் இடையூறால் மாற்றுவழி தேவை

 ஏகாம்பரர் கோவிலுக்கு புது தங்கத்தேர் செல்வதில் சிக்கல் மின் ஒயர்கள் இடையூறால் மாற்றுவழி தேவை

காஞ்சிபுரம்: ஓரிக்கையில் புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரை, பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர் எடுத்து செல்லும் வழியில் மின் ஒயர்கள் இடையூறாக இருப்பதால், மாற்றுவழியாக மிலிட்டரி சாலையில் எடுத்துச் செல்ல எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், 29 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேக விழா, வரும் 8ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிய தங்கத்தேர் செய்து கொடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். 12 ஆண்டுகளுக்கு முன், தேர் செய்யும் பணி துவங்கி, பின் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, காஞ்சி சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தலின்படி, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, ஓரிக்கை மஹா சுவாமிகள் மணி மண்டபத்தில், புதிய தங்கத்தேர் செய்யும் பணி நடந்து வந்தது. அதன்படி, 23 அடி உயரம்; 15 அடி நீளம்; 13 அடி அகலம் உடைய தேரில் 23 கிலோ தங்கம் பூசி, புதிய தங்கத்தில் தேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தங்கத்தேரின் வெள்ளோட்டம் டிச., 6ல் நடைபெற உள்ளது. அன்றைய தினமே புதிய தங்கத்தேரை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, புதிய தங்கத்தேர் காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமிகளின் மணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, வேளிங்கைபட்டரை, வள்ளல் பச்சையப்பன் தெரு, காமராஜர் வீதி, மேற்கு ராஜவீதி, சங்கர மடம் வழியாக ஏகாம்பரநாதர் கோவிலை சென்றடைய உள்ளது. இந்த தேர் செல்லும் வழியில் குடியிருப்பு, வணிக மின் ஒயர் மற்றும் மின்மாற்றிக்கு செல்லும் வழித்தடத்தை மின் வாரிய அதிகாரிகள் துண்டித்து, தேரோட்டம் முடிந்த பின், மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டிய சூழல் உள்ளது. மின் இணைப்பு ஒயர்கள் மற்றும் மின் கம்பிகள் இணைப்பு துண்டிக்கும் போது, குடியிருப்புவாசிகள் மற்றும் வணிக நிறுவனங்கள், நாள் கணக்கில் மின் இணைப்பு இன்றி தவிக்க வேண்டி இருக்கும். இதை தவிர்க்க, மாற்று வழித்தடத்தில் புதிய தங்கத்தேரை எடுத்துச் செல்ல மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பல தரப்பினர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது: ஓரிக்கை முதல் மூங்கில் மண்டபம் வரையில் மின் இணைப்புகளை கழற்றி, மீண்டும் கட்ட வேண்டும். தங்கத்தேர் சிறப்பு பணி என, இருக்கும் சில ஊழியர்களும் சென்றுவிட்டால், மின் பிரச்னைகளை சரி செய்ய முடியாத சூழல் ஏற்படும். இதை தவிர்க்க, மாற்று வழித்தடத்தில் தங்கத்தேரை எடுத்துச் செல்ல பல துறை அதிகாரிகள் ஆலோசனை செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட கண்காணிப்பு பொறியாளர் ராமசந்திரன் கூறியதாவது: கோட்ட பொறியாளர், நகர உதவி கோட்ட பொறியாளர் உள்ளிட்ட மின் வாரிய அதிகாரிகளின் கலந்தாலோசனை கூட்டத்திற்கு பின், தேருக்கு எவ்வித பாதிப்பின்றி மின் வழித்தடங்களை கடந்து செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் மின் இணைப்பு அகற்றி, உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிதளவில் பாதிப்பு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். திருவண்ணாமலை தீப சிறப்பு பணியில் உள்ளோம். இந்த பணி நிறைவு பெற்ற பின், காஞ்சிபுரம் எஸ்.பி., தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தி, புதிய தங்கத்தேர் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். - சங்கர்கணேஷ், காஞ்சிபுரம் டி.எஸ்.பி., புதிய தங்கத்தேர், ஹிந்து சமய அறநிலையத்துறையில் ஒப்படைக்கும் வரையில், தேர் செய்யும் குழுவினரின் பொறுப்பாகும். அதன் பிறகே, துறை ரீதியான திட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். - குமரதுரை, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் அறநிலையத்துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை