கரூர் : கரூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில், 95.90 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச், 1ல் தொடங்கி, 22ல் நிறைவு பெற்றது. கரூர் மாவட்டத்தில், 4,274 மாணவர்கள், 5,200 மாணவிகள் என மொத்தம், 9,474 பேர் தேர்வு எழுதினர். அதில், 4,021 மாணவர்கள், 5,065 மாணவிகள் என மொத்தம், 9,086 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 96.25 சதவீதம், மாணவிகள், 97.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக, கரூர் மாவட்டத்தில், 95.90 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.வெறிச்சோடி காணப்பட்ட பள்ளிகள்கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் பொதுத்தேர்வு முடிவுகளை பார்க்க, படித்த பள்ளிகளில் மாணவ, மாணவிகள் செல்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மாணவ, மாணவிகளின் மொபைல் போனுக்கு, தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் பள்ளிக்கல்வி துறை மூலம் அனுப்பப்படுகிறது. இதனால், மாணவ, மாணவிகள் பெரும்பாலும், படித்த பள்ளிகளுக்கு செல்வது இல்லை. இதனால், கரூரில் உள்ள மாநகராட்சி பசுபதீஸ்வரரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சில தனியார் பள்ளியில் உள்ள வளாகங்கள், மாணவர்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. பள்ளிக்கு வந்த, ஒரு சில மாணவர்கள் மொபைல் போன்களை பார்த்துதான், தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.இலவச மதிப்பெண் பட்டியல் கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கணினி மூலம் இலவசமாக மதிப்பெண் பட்டியல், பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டது. அதை, மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று பெற்றுக் கொண்டனர்.