கரூர், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் நடப்பு ஆண்டில், 703 வீடுகள் கட்ட இலக்கு என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், குப்பம் பஞ்., கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகள் கட்டப்பட்டு வரும் வீடுகளை, கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.பின், அவர் கூறியதாவது: கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குறைந்தபட்சம், 300 சதுர அடி பரப்பளவில் சிமென்ட் கான்கிரீட் கூரையுடனும், மீதமுள்ள, 60 சதுர அடி பயனாளியின் விருப்பப்படி தீப்பிடிக்காத வேறு வகையான கூரையுடன் அமைத்துக் கொள்ளலாம். கூடுதல் வசதிகள் செய்ய 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி பெறலாம். கிராம பஞ்., உள்ள 5 உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக்குழுவால், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபை கூட்டங்களில் வைத்து ஒப்புதல் பெறப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு, வீடு கட்டுவதற்கான நிதி அரசின் சார்பில் நேரடியாக செலுத்தப்படும். கரூர் மாவட்டத்தின், 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 157 கிராம பஞ்.,ல், 2024--25ம் ஆண்டில் 742 வீடுகள், 25.97 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 2025--26ம் ஆண்டில், 703 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 142 வீடுகள், 4.97 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 561 வீடுகள், 19.63 கோடி ரூபாய் மதிப்பில் கட்டும் பணிகள் நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரபாண்டியன், தேன்மொழி உள்பட பலர் பங்கேற்றனர்.