பள்ளிப்பாளையம்: களியனுார் பஞ்சாயத்தில் நடக்க இருந்த கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.குடியரசு தினத்தையொட்டி, பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட, 15 பஞ்., பகுதியிலும், நேற்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, களியனுார் பஞ்., ஆவத்திபாளையத்தில் கிராம சபை கூட்டம் காலை, 11:00 மணிக்கு துவங்கியது. பஞ்., பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், சாயக்கழிவு நீர் அதிகளவில் செல்கிறது. இதனால் குடிநீர், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. கூட்டத்திற்கு வந்தால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என, தெரிந்து அதிகாரிகள் வரவில்லை. பஞ்., பகுதியில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்னை குறித்து மக்கள் தெரிவித்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்து, களியனுார் பஞ்., தலைவர் ரவிகுழந்தைவேல் கூறியதாவது:கிராம சபை கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொள்ள வேண்டும் என, பஞ்., சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால், கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதேபோல், பாதரை பஞ்., பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில், பெரிய தோட்டம், வேப்பங்காடு ஆகிய பகுதியை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர். அவர்கள், தங்கள் பகுதியில் சாலை வசதி இல்லாததால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 3 நாளில் பிரச்னை தீர்க்கப்படும் என, தெரிவித்தனர். இதையடுத்து, காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.