கரூர்: ''நிதி கமிஷன் ஒதுக்கிய பணத்தை கொடுத்துவிட்டு, வெள்ள நிவாரண நிதி கொடுத்து விட்டோம்,'' என, மத்திய அரசு பொய் சொல்கிறது என, தி.மு.க., - எம்.பி., ராஜா குற்றச்சாட்டு தெரிவித்தார்.கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, திருவள்ளூர் மைதானத்தில் மாவட்ட தி.மு.க., சார்பில், கரூர் லோக்சபா தொகுதி பிரசார கூட்டம் நடந்தது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். நீலகரி எம்.பி., ஆ.ராஜா கலந்துகொண்டார்.தொடர்ந்து அவர் பேசியதாவது:லோக்சபா கூட்டம் நடக்கும் போது, பிரதமர்கள் வெளிநாடு செல்ல மாட்டர்கள் என்பது மரபு. அதை மீறி, பிரதமர் மோடி வெளிநாடு செல்கிறார். மேலும், கேள்வி நேரத்தில் லோக்சபாவில் இருப்பது கிடையாது. ஊழல் குற்றச்சாட்டு கூறினால் அதற்கு பதில் கூறுவதில்லை. -தேர்தல் பத்திரம் மூலம், 6,500 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது. இதற்கு பதில் சொல்வாரா பிரதமர் மோடி? பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 6வது ஆடியோ டேப் வெளியிட்டு கொண்டிருக்கிறார். அவர், 60 டேப்கள் வெளியிட்டாலும், ஊழல் செய்யாதபோது என்ன செய்ய முடியும்.பல்வேறு ஊழலில் ஈடுபட்ட, பா.ஜ., ஊழலை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. ஒருபக்கம் ஊழல் ஒரு பக்கம் மதவாதம் இதுதான், 10 ஆண்டு மோடி ஆட்சியில் நடக்கிறது. காங்கிரசை சேர்ந்த, மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் கமலநாத், கட்சி மாறுகிறார் என்ற தகவல் குறித்து விசாரித்தேன். எனக்கு கிடைத்த செய்தி, 'எனக்கு, 80 வயதாகி விட்டது. எனது உடல்நிலை காரணமாக சிறையில் இருக்க முடியாது. அதனால், பா.ஜ.,வுக்கு போய் விடாலாம் என்று நினைக்கிறேன்' என, காங்., முன்னாள் தலைவர் சோனியவிடம் கூறியுள்ளார்.இயற்கை பேரிடர் சீற்றத்தால் தமிழகம் பாதிக்கப்பட்டது. இதற்கு, 37,000 கோடி ரூபாய் நிதி கேட்டால், 1,500 கோடி ரூபாய் கொடுத்து விட்டோம் என பதில் சொல்கின்றனர். 15வது நிதி கமிஷன் ஒதுக்கப்பட்ட பணத்தை கொடுத்து விட்டு, வெள்ள நிவாரண நிதி கொடுத்து விட்டோம் என, பொய் சொல்கிறார். ஒரு ரூபாய் கூட தராத பிரதமர் மோடி, மீண்டும் வெற்றி பெற்றால் நாங்கள் இந்தியாவில் இருக்க வேண்டுமா? என்ற கேள்வி வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் காந்திராஜன், இளங்கோ, சிவகாமசுந்தரி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.