கரூர்: வாங்கல் ரயில்வே ஸ்டேஷன், நாளை முதல் மூடப்படுகிறது.கரூர்-சேலம் இடையே புதிய ரயில்வே வழித்தடம் கடந்த, 2013 முதல் செயல்பட்டு வருகிறது. அதன் வழியாக நாள்தோறும், 10க்கும் மேற்பட்ட பயணிகள், சிறப்பு ரயில்கள் சென்று வருகிறது. இந்நிலையில் கடந்த, 2018ல் மத்திய ரயில்வே வாரிய வணிகத்துறை அதிகாரிகள், அதிக ரயில்கள் இயக்கமில்லாத வழித்தடங்களில், தனியாரால் இயக்கப்படும் ரயில் ஸ்டேஷன்களில் இருந்து, நாள் தோறும் குறைந்தப்பட்சம், 25 பயணிகள் ஏறி செல்லாத, ரயில்வே ஸ்டேஷன்களை மூட உத்தர விட்டது.அதன்படி, சேலம்-கரூர் வழித்தடத்தில் உள்ள புதுச்சத்திரம் (நாமக்கல்) லத்துவாடி (கரூர்) ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் கடந்த, சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல்-கரூர் இடையே உள்ள, வாங்கல் ரயில்வே ஸ்டேஷன் மூலம், போதிய பயணிகள் செல்லாததால், நாளை முதல் வாங்கல் ரயில்வே ஸ்டேஷன் மூடப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. * கரூர்-சேலம் ரயில்வே வழித்தடம் கடந்த, 2013 முதல் செயல்படுகிறது. அதன் வழியாக செல்லும் ரயிலில் நாமக்கல், மோகனுாரில் இருந்து பயணிகள், கரூருக்கு சென்று வந்தனர். இந்நிலையில், 2014ல் நாமக்கல் மாவட்டம் மோகனுார், கரூர் மாவட்டம் வாங்கல் பகுதிகளை இணைக்கும் வகையில், காவிரியாற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.பாலத்தின் வழியாக அரசு பஸ், தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், பாலத்தின் வழியாக நாமக்கல், மோகனுார் பகுதி மக்கள் கரூருக்கு, கார், டூவீலர் மூலம் பொதுமக்கள் எளிதாக செல்கின்றனர்.இதனால், வாங்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு பயணிகள் வருகை குறைவால், வாங்கல் ரயில்வே ஸ்டேஷன் மூடப்படுகிறது என, ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.