| ADDED : ஜூலை 17, 2024 09:19 PM
ஓசூர்:ஓசூரில், பேன்சி ஸ்டோர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பொருட்கள் எரிந்து நாசமாகின.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சாலையிலுள்ள சாந்தி நகரை சேர்ந்தவர் சுதாகர், 45; ஓசூர் எம்.ஜி.,ரோட்டில், ஜே.ஆர்.கே., ஸ்டோர் என்ற பேன்சி மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். கடந்த, 15 ல் சபரிமலைக்கு சுதாகர் சென்றுள்ளார். அவர் மனைவி சுவேதா, 37, கடையை கவனித்து வந்தார். கடைக்கு எதிரே உள்ள ஒரு குடோனில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேன்சி மற்றும் அலங்கார பொருட்களை சுதாகர் வைத்திருந்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு, குடோனின் பின்பக்க ஷட்டர் அருகே, பழைய பொருட்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ, குடோனுக்குள் பரவி, அங்கிருந்த பொருட்கள் எரிய துவங்கின. ஓசூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் வந்து, 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், குடோனில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.