| ADDED : ஏப் 30, 2024 08:26 PM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானசந்திரம் கடவுள் நகரை சேர்ந்தவர் நாகராஜ், 40, இவரது மகன் மதுபாலா, 8. அப்பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 3ம் வகுப்பு படித்து வந்தார்.சம்பவத்தன்று மதியம் 3:00 மணிக்கு, நாகராஜ் தன் தங்கை கணவரான காடுலக்கசந்திரத்தை சேர்ந்த திம்மராஜ், 33, மற்றும் தன் மகன் மதுபாலா ஆகியோரை அழைத்து கொண்டு, காரப்பள்ளியிலுள்ள ஏரிக்கு சென்றார்.சிறிது நேரம் கழித்து, திம்மராஜ் மற்றும் மகன் மதுபாலா ஆகியோரை ஏரி அருகே இருக்க கூறி விட்டு, காரப்பள்ளிக்கு நாகராஜ் சென்றார். அப்போது ஏரியில் இறங்கிய மாணவர் மதுபாலா நீரில் மூழ்கினார்.இதை கவனித்த திம்மராஜ், ஏரிக்குள் இறங்கி மதுபாலாவை காப்பாற்ற முயன்றபோது அவரும் நீரில் மூழ்க துவங்கினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, மாணவன் மதுபாலா மற்றும் திம்மராஜ் ஆகியோரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு மாணவர் மதுபாலா உயிரிழந்தார். சுயநினைவை இழந்த திம்மராஜ், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.