மொரப்பூர்: நீர்ப்பாசன திட்டங்களை முறையாக செயல்படுத்தாததால், மொரப்பூர் பகுதியில் விவசாயம் பாதித்துள்ளதுடன், குடிநீருக்கு மக்கள் தவித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சியால் விவசாயம் பாதித்து, குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளை காப்பாற்ற, விவசாயிகள் நீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். தற்போதைய நிலைக்கு நீர்ப்பாசன திட்டங்களை முறையாக செயல்படுத்தாததே காரணம் என, விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது:மழைக்காலங்களில் தென்பெண்ணையாற்றில் செல்லும் வெள்ளநீர் மற்றும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர், வீணாக கடலில் கலக்கிறது. இதை கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை வலதுபுற வாய்க்காலை, மொரப்பூர் வரை நீட்டிக்க, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், எம்.வெளாம்பட்டி அருகே செல்லும், தென்பெண்ணையாற்றின் குறுக்கே, செனாக்கல் என்னும் இடத்தில், தடுப்பணை கட்ட கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தடுப்பணை கட்டுவது குறித்து, அதிகாரிகள் பலமுறை ஆய்வு நடத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும், கே.ஈச்சம்பாடி தடுப்பணை, நீரேற்று திட்டம் மூலம், மொரப்பூர், கடத்துார், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளிலுள்ள, 66 ஏரிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இதையேற்று, தமிழக அரசு கடந்த, 2020 பட்ஜெட்டில், 410 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், இதுவரை பணிகளை துவங்கவில்லை. இத்திட்டங்களை செயல்படுத்தி இருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளித்திருக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.