உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உச்சநீதிமன்ற நிலுவை வழக்குகளுக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு

உச்சநீதிமன்ற நிலுவை வழக்குகளுக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு

கிருஷ்ணகிரி:''உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு, சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணலாம்,'' என, கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா கூறினார்.இது குறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை பொறுத்து, சமூகமாக தீர்வு காணும் வகையில் வரும், 29 முதல் ஆக., 3 வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணலாம். வழக்காடிகள் நேரடியாகவோ, வழக்கறிஞர்கள் மூலமோ, நேரிலோ அல்லது காணொலி மூலமோ, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி தீர்வு காணலாம். இந்த சிறப்பு நீதிமன்றம் மூலம், விரைவான சமரசம், வழக்குகளில் தீர்வு, இறுதி மற்றும் செயல்படுத்தக்கூடிய தீர்வு காணலாம். குறிப்பாக, டில்லியிலுள்ள உச்சநீதிமன்றத்திற்கு செல்லாமல் இங்கிருந்தே தீர்வு காணலாம். இதனால், செலவின்றி பிரச்னைக்கு சரியான தீர்வு கிடைக்கும். உச்சநீதிமன்றத்தில் செலுத்திய கட்டணமும் திரும்ப பெறலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு உரிமையியல் வழக்குகள், 14, மோட்டார் வாகன வழக்குகள், 4, செக் மோசடி வழக்கு ஒன்று, விவாகரத்து வழக்குகள், 2 என மொத்தம், 21 வழக்குகள் உள்ளன. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, மேல்முறையீடாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் செய்து கொள்ளலாம். வழக்குகளை இரு தரப்பினரின் முழு சம்மதத்தோடு, சட்டரீதியாக மட்டுமே, சமரசம் செய்து வைக்கப்படும். கட்டாயப்படுத்தி வழக்குகளுக்கு தீர்வு காண்பதில்லை. நிலுவையிலுள்ள வழக்குகள் தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அல்லது உயர்நீதிமன்றத்தில் அமைத்துள்ள அமர்வுகளை வரும், 29 க்கு முன்பேகூட அணுகலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.குடும்ப நல நீதிபதி நாகராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதிரன், சிறப்பு மாவட்ட நீதிபதி (மோட்டார் வாகன விபத்துகள்) அமுதா, கூடுதல் சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமான ஜெனிபர் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி