தேன்கனிக்கோட்டை;தேன்கனிக்கோட்டையில், ஒரு நிமிடத்தில், 51 நாடுகளின் கொடியை பார்த்து, அந்நாட்டின் பெயர்களை சரியாக கூறி, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில், பெண் குழந்தை இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மஞ்சுநாதா லே அவுட்டைச் சேர்ந்தவர் அம்ரேஷ், 35, ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி நந்தினி, 25. இவர்களுக்கு லேக்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.இக்குழந்தைக்கு, 3 வயது, 11 மாதங்கள் ஆகின்றன. தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிரி கே.ஜி., படிக்கிறார்.குழந்தையின் நினைவுத்திறன் அதிகமாக இருப்பதை அறிந்த பெற்றோர், பல்வேறு நாடுகளின் பெயர்களை அந்நாட்டு கொடியுடன் சொல்லி கொடுத்தனர். குழந்தையிடம் ஒரு நாட்டின் கொடியை காட்டினால், நாட்டின் பெயரை சரியாக கூறினார்.இதை பார்த்து ஆச்சர்யமடைந்த பெற்றோர், குழந்தையின் சாதனையை பதிவு செய்ய முடிவு செய்தனர்.அதற்காக ஒரு நிமிடத்திற்குள், 51 நாட்டின் தேசிய கொடியை அடுத்தடுத்து குழந்தை லேக்சனாவிடம் காட்டினர்.ஒவ்வொரு கொடியை பார்த்து, நாட்டின் பெயரை லேக்சனா சரியாக கூறினார். அதை வீடியோவாக பதிவு செய்த பெற்றோர், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸிற்கு பிப்., 12ல் அனுப்பினர்.இந்த சாதனையை பிப்., 20ல் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்தது. அதற்கான சான்றிதழ், பதக்கத்தை குழந்தைக்கு அனுப்பி வைத்தது. இதனால், குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.