ஓசூர்: ஓசூர் அருகே, தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்யும் நோக்கில் தாக்கிய, 3 பேரை கைது செய்த போலீசார், 6 பேரை தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஒன்னப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ் மகன் சதீஷ்குமார், 23; இவரும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார், 27, என்பவரும், ஓசூர் அருகே பூனப்பள்ளியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். பொம்மாண்டப்பள்ளி சர்க்கிள் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியுள்ளனர். கடந்த, 12 மதியம், 2:00 மணிக்கு இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதை தன் நண்பர்களிடம் அஜித்குமார் கூறியுள்ளார். அன்றிரவு, 11:15 மணிக்கு, பணி முடிந்து வெளியே வந்த சதீஷ்குமாரை, நிறுவனத்தின் முன் வைத்து, அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டாக சேர்ந்து கட்டை மற்றும் கத்தியால் தாக்கினர்.இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார், உயிருக்கு ஆபத்தான நிலையில், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தை முனிராஜ், 45, புகார்படி, கொலை முயற்சி வழக்குப்பதிந்த மத்திகிரி போலீசார், மதுரை மாவட்டத்தை சேர்ந்த அருண்பாண்டி, 32, வீரபாண்டிகுமார், 20, கடலுார் பிரகாஷ்ராஜ், 24, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அஜித்குமார், 27, சச்சின், 19, மத்திகிரி அருகே பேலகொண்டப்பள்ளியை சேர்ந்த சுனில்குமார், 26, திருப்பத்துார் மாவட்டம் அஜித்குமார், 24, மதுரை அஜய், 22, பொம்மாண்டப்பள்ளி வினய், 24, ஆகிய, 6 பேரை தேடி வருகின்றனர்.