| ADDED : ஜன 03, 2024 12:27 PM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகே உள்ள வேளாங்கண்ணி பள்ளி முன் துவங்கி, பூனப்பள்ளி, பேலகொண்டப்பள்ளி வழியாக உப்பாரப்பள்ளி வரை, குறிப்பிட்ட இடங்களில் மட்டும், 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள், 66 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஆக., 30ல் துவங்கப்பட்டது. பேலகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனம் முன், தளி சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கிறது. சாலையோர மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால், அவை, விரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ளன. இதனால், சாலை விரிவாக்க பணி பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.மேலும், உப்பாரப்பள்ளியில் நடக்கும் சாலை விரிவாக்க பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே, ஜல்லி கொட்டப்பட்ட நிலையில், இன்னும் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க, மின் கம்பத்தை இடம்மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.