காவேரிப்பட்டணம்:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வீரமலையைச் சேர்ந்தவர் முனிரத்தினம், 55, கூலித்தொழிலாளி; இவர், டிச., 15ல் காவேரிப்பட்டணத்திலுள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம்., மையத்துக்குச் சென்றார்.அங்கிருந்த ஒருவர் உதவியுடன், தன் கணக்கிலிருந்து, 15,000 ரூபாய் எடுத்தார். அப்போது அங்கிருந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் அவரிடம் வந்து, வங்கியில் மீதித்தொகையை சரிபார்த்து தருவதாக கூறி, அவரது ஏ.டி.எம்., கார்டை பெற்றார். ஆனால், திருப்பிக் கொடுக்கும் போது, முனிரத்தினத்திடம், ஏ.டி.எம்., கார்டை மாற்றிக் கொடுத்தார். இந்நிலையில், டிச., 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து, 64,000 ரூபாய் எடுக்கப்பட்டது. இது குறித்து, எஸ்.பி., அலுவலகம் வரை முனிரத்தினம் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.இது குறித்து, காவேரிப்பட்டணம் போலீசார் கூறுகையில், 'ஏ.டி.எம்., மையம் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார்'என்றனர்.