| ADDED : நவ 18, 2025 01:35 AM
கிருஷ்ணகிரி, கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, நேற்று ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம், 1ல் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை, 5:00 மணிக்கு, கிருஷ்ணகிரியில், சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். ஐயப்பன் கோவிலில் உள்ள குருசாமிகள் பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தனர். மாலை அணிந்து கொண்ட பக்தர்கள் கோவிலில் ஐயப்ப பஜனை பாடல் பாடி வேண்டிக் கொண்டனர். சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தது.ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. நேற்று, சிறுவர்கள், பெண்கள் உள்பட, 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டனர். * கார்த்திகை மாத முதல் நாளான நேற்று தர்மபுரி, இலக்கியம்பட்டி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோவில் மற்றும் ஐயப்பன் பிரகாரங்களில், நேற்று காலை குருசாமிகள் மூலம் பக்தர்கள் மாலை அணிந்தனர். முன்னதாக, ஐயப்பன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.