கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அவதானப்பட்டி படகு இல்லத்தை, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரியில், சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள அவதானப்பட்டி ஏரியில், 15 ஏக்கர் பரப்பளவில் கடந்த, 2005ம் ஆண்டு, 77 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்கப்பட்டது. சிறுவர் பூங்கா, 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தற்போது, 5 பெடலிங் படகுகள், ஒரு துடுப்பு படகு, ஒரு இயந்திர படகும் உள்ளன. படகு இல்லத்திற்கு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார் மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், கிருஷ்ணகிரி வழியாக சுற்றுலா செல்பவர்களும் வந்து செல்கின்றனர்.இந்த படகு இல்லத்தை நவீனபடுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு, இங்கு ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், படகு இல்லத்தை மேம்படுத்த கருத்துரு அனுப்ப உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அவதானப்பட்டி படகு இல்லத்தை, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் நவீன படுத்தப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், படகு இல்லத்திற்கான சுற்றுச்சுவர்கள், படகுகள் நிறுத்த தனி இடம், டூவீலர், கார் நிறுத்தும் இடம், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அழகுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக அமைத்துள்ள குழுவினர், படகு இல்லத்தில் ஆய்வுகள் மேற்கொண்ட பின், பணிகள் தொடங்கும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.