| ADDED : ஏப் 02, 2024 04:53 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சீத்தாராம்மேடு ஜலகண்டேஸ்வர் நகரை சேர்ந்தவர், கிரஷர் நிறுவன உரிமையாளர் லோகேஷ்குமார், 35; இவரது வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணி முதல், ஓசூர் வருமான வரித்துறை இணை இயக்குனர் விஷ்ணு பிரசாத் தலைமையிலான, 6 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத, 1.20 கோடி ரூபாய் மற்றும் 75 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். பின், பேரண்டப்பள்ளியிலுள்ள லோகேஷ்குமார் கிரஷரில் சோதனை நடத்தினர்.தொடர்ந்து நேற்று, 2வது நாளாக லோகேஷ்குமார் வீட்டில் சோதனை நீடித்தது. அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது வங்கி கணக்கு விபரங்கள், சொத்து மதிப்பு ஆவணங்கள் ஆகியவற்றை வருமான வரித்துறையினர் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர். நேற்று மதியம், 12:30 மணிக்கு சோதனை நிறைவு பெற்றது. எப்போது, விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக, லோகேஷ்குமாரிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் கூறிச்சென்றனர்.