உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பர்கூர் கல்வி அலுவலர் மீது நில மோசடி புகார்

பர்கூர் கல்வி அலுவலர் மீது நில மோசடி புகார்

ஓசூர்: ஓசூர் அருகே நில மோசடியில் ஈடுபட்டதாக பர்கூர் உதவி தொடக்க கல்வி அதிகாரி மீது எஸ்.பி., அலுவலகத்தில் விவசாயி புகார் செய்தார்.சூளகிரி அடுத்த சோமநாதபுரத்தை சேர்ந்தவர் விவசாயி சையத் காசிம் சாகிப். ஓசூர் அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரம் இஸ்லாம் பூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தற்போது பர்கூரில் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.வெங்கடேசன், சைத் காசிமுக்கு சொந்தமான தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்துக்கு பட்டா வாங்கி தருவதாக ஏமாற்றி நிலத்தை எழுதி வாங்கி மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சையத் காசிம் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:ஓசூர் தாலுகா தொரப்பள்ளி அக்ரஹாரம் இஸ்லாம்பூர் கிராமத்தில் ஆரம்பத்தில் வசித்தேன். அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் பர்கூரில் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் எங்கள் ஊரில் படித்தவர். நான் படிக்காதவன். எனக்கு இஸ்லாம்பூரில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது.என்னுடைய நிலத்தை ஆரம்பம் முதல் விலைக்கு கேட்டு வந்தார். நான் கொடுக்கவில்லை. இதனால், எப்படியாவது என்னுடைய நிலத்தை அபரிக்க திட்டம் போட்டார். இந்த நேரத்தில் என்னுடைய மகன்கள் குடும்ப வறுமையால் துபாயில் வேலைக்கு சென்றனர்.இதை சாதகமாக பயன்படுத்தி மோசடி திட்டத்துடன் வெங்கடேசன், என்னுடைய நிலத்திற்கு பட்டா வாங்கி தருவதாக கூறினார். அதற்காக என்னுடைய நிலத்தை 2004ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள ஜக்கப்பன் நகரில் 8வது கிராஸ், கதவு எண்.90'சி'யில் வசிக்கும் அன்பு என்பவரின் மகன் முருகன் என்பவரின் பெயருக்கு பவர் எழுதி வாங்கினார். நான் படிக்காதவன் என்பதால், பட்டா வாங்கி தருவதற்காகதான் எழுதி வாங்குகின்றனர் என நினைத்தேன். அவர்கள் கூறிய படி பட்டா வாங்கி தரவில்லை.அதன்பின் என்னுடைய நிலத்தின் இ.சி., எடுத்து பார்த்தபோது என்னுடைய நிலத்தை ஏமாற்றி எழுதி வாங்கியது தெரிந்தது. கடந்த பல ஆண்டாக போலீஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதற்கிடையில் வெங்கடேஷன், முருகனிடம் இருந்து நிலத்தை அவருடைய மனைவி பெயரில் கிரயபத்திரம் வாங்கி மோசடி செய்து விட்டார். இதை தட்டிகேட்டால் உயிரை எடுத்து விடுவதாக வெங்கடேசன் மிரட்டுகிறார்.தற்போது, வீடு இல்லாமல் சோமநாதபுரத்தில் எனது மகன் வீட்டில் தங்கி ஆடு மேய்த்து வருகிறேன். என்னுடைய நிலத்தை மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தருமாறு கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை