ஓசூர்,: தமிழக எல்லை சோனைச்சாவடியில் ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் சரயு, இதுவரை மொத்தம், 3.45 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலையையொட்டி, ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் நல்லுார் அரசு துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி மையங்களை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் சரயு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், மின்சார வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகளை பார்வையிட்டார். நல்லுார் பஞ்.,ல் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கினார். தொடர்ந்து, கர்நாடகா மாநில எல்லையான, கக்கனுார் சோதனைச்சாவடியில், துணை ராணுவ படையினர் மற்றும் பறக்கும் படையினர் நடத்தும் வாகன சோதனை மற்றும் ஈச்சங்கூர் பஞ்., ல், 100 வயதான மூதாட்டி ஈரம்மா என்பவர், தபால் ஓட்டளிப்பதை பார்வையிட்டார்.தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறும் போது, கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலையொட்டி, 66 பறக்கும் படை, 54 நிலை கண்காணிப்பு குழுக்கள் மூலம், தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாநில எல்லையில் உள்ள, 15 சோதனைச்சாவடிகளில், 24 மணி நேரமும், இரு, நான்கு சக்கர வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் இதுவரை, 3.45 கோடி ரூபாய், 20.62 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.