தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம் பஞ்.,ல் உள்ள, 48 குக்கிராமங்களும், காவேரி வடக்கு வன உயிரின சரணாலயத்திற்குள் வருகிறது. அதனால், இக்கிராமங்களில் புதிய போர்வெல் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் ஏதும் செய்ய வேண்டுமென்றால், வனத்துறை அனுமதி பெற வேண்டும். வனப்பகுதிக்குள் உள்ள, 3,000 ஏக்கருக்கும் மேலான பட்டா நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது கோடையால், கடும் தண்ணீர் தட்டுப்பாடால், பயிர்கள் வாடி வருகின்றன. மக்களும் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர். எனவே, கிட்டாச்சிகள் உதவியுடன் விவசாய கிணறுகளை துார்வார அனுமதிக்க வேண்டும். புதிய போர்வெல்கள் போட்டுக் கொள்ள, வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என, விவசாயிகள் கேட்டு வருகின்றனர். ஆனால், வனத்துறை அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதால், 25 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்கள் கருகி வருவதாக கூறி, கடந்த, 18 ல் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து, தேர்தலை புறக்கணிக்க போவதாக, கிராம மக்கள் அறிவித்தனர்.தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகர், 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பெட்டமுகிலாளம் பஞ்., மக்கள், 100 க்கும் மேற்பட்டோர், அய்யூர் வனத்துறை சோதனைச்சாவடி அருகே நேற்று காலை, 11:30 முதல், மதியம், 1:00 மணி வரை, 36 ம் நம்பர் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து, வனத்துறையை கண்டித்து, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அவ்வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், மக்கள் கலைந்து சென்றனர்.