உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கப்பலுார் டோல்கேட்டை அகற்றக்கோரி கடையடைப்பு; முன்னாள் அமைச்சர் உதயகுமார் உட்பட 400 பேர் கைது

கப்பலுார் டோல்கேட்டை அகற்றக்கோரி கடையடைப்பு; முன்னாள் அமைச்சர் உதயகுமார் உட்பட 400 பேர் கைது

திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலுார் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம் பகுதியில் நேற்று கடையடைப்பு நடந்தது. கடையடைப்புக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் உதயகுமார், பல்வேறு அரசியல் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.கப்பலுார் டோல்கேட்டை இடமாற்றம் செய்து நிரந்தர தீர்வு காண வலியறுத்தி திருமங்கலம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். பல்வேறு பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. நேற்று திருமங்கலத்தைச் சேர்ந்த 28 சங்கங்கள் மற்றும் எதிர்ப்பு குழுவினர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இதற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க., வினர் கப்பலுார் டோல்கேட் பகுதியில் மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து உதயகுமார் உட்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.உதயகுமார் பேசியதாவது: இந்த டோல்கேட்டில் அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளூர் வாகனங்களுக்கு முழு கட்டண விலக்கு அளிக்கப்பட்டது. 2021 முதல் வாகன ஓட்டிகளிடம் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கின்றனர். கட்டணம் செலுத்தாமல் சென்றதாக உள்ளூர் வாகனங்களுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ.24 லட்சம் அபதாரம் விதித்துள்ளனர்.டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்ற மக்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதுவரை நான் 22 மனுக்களை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் இங்கு வந்த போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் டோல்கேட் அகற்றப்படும்'என்றார். மூன்றாண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. டோல்கேட்டை நிரந்தரமாக அகற்றி, நிலுவை கட்டணம் கேட்டு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என்றார். உதயகுமார் உட்பட பலரையும் மேலக்கோட்டையில் உள்ள தனியார் மஹாலில் அடைத்தனர். அவர்களை பேட்டி காணச் சென்ற செய்தியாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், கப்பலுார் சிட்கோ தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாத ராஜா ஆகியோர் உள்ளே செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். அவர்களுடன் உதயகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் மஹால் முன் கூடியிருந்த பொதுமக்கள் நான்கு வழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. டோல்கேட் அருகே வந்த கப்பலுார் ஊராட்சித் தலைவர் கண்ணனை வலுக்கட்டாயமாக துாக்கி வண்டியில் ஏற்றினர்.

எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகள்

கைதானவர்களை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர். இந்திய கம்யூ.,-பா.ஜ.,- நாம் தமிழர் கட்சி உட்பட பிற கட்சியினர் 50 பேரும் கைதாகினர். கப்பலுார் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி ஜூலை 10ல் முன்னாள் அமைச்சர் உதயகுமார், திருமங்கலத்தைச் சேர்ந்த 28 சங்கங்கள், எதிர்ப்பு குழுவினர் கப்பலுார் சிட்கோ தொழிலதிபர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை நடந்த போராட்டத்தால் திருமங்கலம் பகுதியில் அனைத்து வாகனங்களும் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இதனால் அவை 20 கி.மீ.,க்கும் மேலாக மாற்றுப்பாதையில் சுற்றிச் சென்றன.இந்நிலையில் நேற்று திருமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்த மீண்டும் அழைப்பு விடுத்து இருந்தனர். அதேநேரம் மறியலும் நடக்கலாம் என்ற தகவலும் போலீசுக்கு கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி., அரவிந்த் தலைமையில் 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 9 டி.எஸ்.பி.,க்கள், 22 இன்ஸ்பெக்டர்கள், 49 எஸ்.ஐ.,க்கள் உட்பட 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கப்பலுார் டோல்கேட் மட்டுமின்றி திருமங்கலத்தில் முக்கிய ரோடுகள், சந்திப்புகள், கூத்தியார் குண்டு - கப்பலுார் சந்திப்பு என எல்லா இடங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டனர். இதனால் எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகளும், வாகனங்களுமாக காட்சியளித்தன. இதனால் அவ்வப்போது மறியல் நடந்தாலும், போக்குவரத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்