திருமங்கலம்,:மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; இவர் குடும்பத்தினரோடு தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டு 'மஹிந்திரா' காரில் மதுரை திரும்பினர். காரை மணிகண்டனே ஓட்டி வந்தார். விருதுநகர் - திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சிவரக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் டூ - வீலரில் சென்ற திருமங்கலம் நடுக்கோட்டையை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி, 52, மீது மோதியது.டூ - வீலருடன், பாண்டியும் 30 அடி துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதையடுத்து கார், நான்கு வழிச்சாலையின் மீடியனில் மோதி, எதிர்புற ரோட்டில் குட்டிக்கரணம் அடித்தபடியே பறந்தது.எதிர் திசையில் ரோட்டோரம் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்தபடி சர்வீஸ் ரோட்டில் போய் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் மணிகண்டனின் தந்தை கனகவேல், 62, தாய் கிருஷ்ணகுமாரி, 51, மனைவி நாகஜோதி, 28, மகள் சிவஆத்மிகா, 8, பலியாகினர். மகன் சிவ ஆதித்யா, 11, மற்றொரு மகள் சிவஸ்ரீ, 8, அத்தை மீனா, 55, மாமா ரத்தினசாமி, 64, படுகாயமடைந்தனர். இவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிவஸ்ரீ பலியானார்.இதை தொடர்ந்து, பலி எண்ணிக்கை ஆறாக அதிகரித்தது. காயம் அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களை போலீசார் மீட்டனர்.கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
துாக்கி வீசப்பட்ட குழந்தைகள்
மீடியனில் மோதி குட்டிக்கரணம் அடித்தபடி கார் பறந்த போது, காரில் இருந்த குழந்தை சிவஆத்மிகா, நாகஜோதி வெளியில் துாக்கி வீசப்பட்டு பலியாகினர். பறந்து சென்ற கார் ரோட்டோர தடுப்பை உடைத்துக் கொண்டு விழுந்தபோது, அதனருகில் டூ - வீலரில் சென்ற ஒருவர் மற்றும் நடந்து சென்ற ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.விபத்து நடந்தது காலை 6:30 மணி என்பதால் சர்வீஸ் ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப்பில் யாரும் இல்லை. பயணியர் இருந்திருந்தால் பலி எண்ணிக்கை அதிகரித்து இருக்கும்.