| ADDED : ஜூலை 29, 2024 06:58 AM
மதுரை : அச்சுறுத்தல் நிலையில் சிவப்பு பட்டியலில் உள்ள மற்றும் அழிந்து வரும் பட்டியலில் உள்ள பறவையினங்கள் மதுரை அவனியாபுரம் சாமநத்தம் கண்மாயில் வந்து தங்குவதால், இக்கண்மாயை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி என தென் மாவட்டங்களில் பறவைகள் சரணாலயம் இருக்கிறது. மதுரையில் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க கோரி கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுக்கப்பட்டது. மனு குறித்து அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்தாசன், பறவைகள் ஆராய்ச்சியாளர் ரவீந்திரன் கூறியதாவது:தமிழகத்தின் மொத்த ஈரநிலங்களின் பரப்பளவு 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 6.92 சதவீதம். ராமநாதபுரத்தில் ஈரநில பரப்பு 18.05, மதுரை மாவட்டத்தில் 6.58 சதவீதம் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள 540 பறவை இனங்களில் 320 இனங்கள் மதுரையில் உள்ளன.மதுரை அவனியாபுரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சாமநத்தம் கண்மாயில் 2015 - 2022 வரை ஆய்வு மேற்கொண்டேம். 155 பறவையினங்கள் கண்மாயை வாழிடமாகவும், தங்கி செல்லுமிடமாகவும் பயன்படுத்துவதை ஆவணப்படுத்தியுள்ளோம்.ஆண்டு முழுதும் ௨௦௦௦- ௩௦௦௦ பறவைகள் இங்கு வசிக்கின்றன. வலசை வரும் குளிர்காலத்தில் ஒரே நேரத்தில் 12 ஆயிரம் எண்ணிக்கையிலான கூட்டத்தையும் பார்க்க முடியும். அரிய வகையைச் சேர்ந்த 23 வகை பறவைகள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. 84 வகை பறவையினங்கள் இங்கேயே கூடுகட்டி வாழ்கின்றன. சரணாலயம் அமைப்பதற்கு தகுதி வாய்ந்த கண்மாயாக சாமநத்தம் கண்மாய் விளங்குகிறது.பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் உலகளவிலான சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பாம்புத்தாரா, மஞ்சள் மூக்கு நாரை, கருந்தலை அன்றில், கூழைக்கடா, கருவாய் மூக்கன், பட்டைவால் மூக்கன், ஆற்று ஆலான், விரால் அடிப்பான் பறவையினங்கள் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.அழியும் நிலையில் உள்ள இந்திய புள்ளிக் கழுகு, பெரும்புள்ளிக் கழுகு இனங்களுக்கு சாமநத்தம் கண்மாய் வாழிடமாக, வாழ்வாதாரமாகவும் உள்ளதால் அவற்றை பாதுகாக்க இக்கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்றனர்.