| ADDED : மே 17, 2024 06:08 AM
சோழவந்தான் : 'கனவிலும் நிறைவேற்ற முடியாதவற்றை வாக்குறுதிகளாக தருவதும், பின்னர் மறுப்பதும், மறப்பதும் தி.மு.க.,வுக்கு கைவந்த கலை' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.சோழவந்தான் பாலகிருஷ்ணாபுரத்தில் அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் துவக்கி வைத்தார்.அவர் கூறியதாவது: தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என அரசு வெளியிட்ட செய்தி குறிப்பை பார்த்து மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். மூன்று ஆண்டுகளில் தமிழகம் தன்னிறைவு பெற்றுவிட்டது என பச்சை பொய்களை சாதனையாக சொல்லலாமா. கனவிலும் நிறைவேற்ற முடியாதவற்றை வாக்குறுதிகளாக அள்ளி வீசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வுக்கு அவற்றை மறுப்பதும், மறப்பதும் கைவந்த கலை.இந்தியாவிலேயே கடன் வாங்குவது, மின்கட்டணம், சொத்து வரி உயர்வு, கொலை, கொள்ளை போதைப் பொருள் புழக்கத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதனை உணராமல் ஸ்டாலின் பெருமிதம் கொள்கிறார். கருணாநிதி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான 2 ஏக்கர் நிலம் தரவில்லை என்பதை பள்ளிப் பாடத் திட்டத்தில் சுட்டிக் காட்டினால் வருகிற தலைமுறையினர் தெரிந்து கொள்வார்கள் என்றார்.